This is the personal website of Garthee, who believes it is the perspiration not the perception that brings the success

Search:     All roads lead to ROME !  

Be Miracle!

சுற்றும் பூமி சுற்றாதே!

பிறந்த மனிதன்
சுடலையில் எரிகின்றான்
கறந்த பால்
கால் மணியில் திரள்கிறது
மறைந்த மனைவி
மாதத்தில் மறந்து போகிறாள்
திறந்த கடைகள்
வருடத்தில் மூடப்படுகின்றன.

மாற்றம் என்பது இதுதான்!
மாற்றத்தின் அர்த்தத்தை தவிர‌
மற்றதெல்லாம் மாறும்!
ஆற்றலின் அழிவின்மை போல...
சுற்றும் பூமியின் நிரந்தர சின்னம்!

காலி மைதானம்
கடைத்தொகுதியாவதும்
அறுபதுகள் கூடும் அரசடி
ஹைவே ஆவதுமல்ல மாற்றம்,
அவை காலத்தின் கட்டாயம்

நாளைய விடிவிற்கான‌
இன்றைய மெழுகுதிரிகள்
ஆனால் எரிந்தால்தான் சுடர்விடலாம்
ஆனால்
ஆளையாள் சாப்பிட‌
அடிக்கப்படும் பல்டியை என்னவென்று சொல்ல?
மறுமலர்ச்சிக்கான மாற்றம் என்பதா?
இராஜதந்திரம் என்பதா?

உயர்தரம் வரை
உத்தம புத்திரன்; அம்மா பிள்ளை
ஆறடித்த பின்னர் வெளியில்வராதவன்
ஆறே மாதத்தில் ரவுடிஸம் பேசுகின்றான்;
சாக்கடை தெறிக்கும் வாயால்!

மாற்றம் உறவிலும்தான்
ஊருடன் ஒத்துவாழ‌
உதறப்பட்ட நட்பு;
சென்னையில் வீரம் காட்ட இடிக்கப்பட்ட
சீரணி அரங்கம் போல!

அடுத்த வீதிக்கும்
இன்ரர் கூலர்ப் பயணம்,
அவசர உதவிக்கு பணம் கேட்டாலோ
உணவிற்காய் ஏங்கும் ஆண்டியாய்,
மாறும்
எட்டு முழ பட்டு வேட்டிகள்!

மாற்றத்தை பற்றி விமர்சிக்க
எனக்கென்ன அருகதையிருக்கு?
வியாழன் பத்து வருடத்திற்கொருமுறையே
சூரியனை சுற்றுகையில்
இறப்பதற்குள் அறுபதுதடவை சுற்றும்
எனக்கென்ன அருகதையிருக்கு?

வியாழனைப்பற்றிய வீண் அலட்டல்
ஏனென்று கேட்கலாம்..!
அடுத்த சந்ததி அடியெடுத்து வைக்க‌
அங்கேயல்லவா
ஆராய்ச்சி நடக்கிறது..!
வியாழனையும் மாற்றிவிட
முயற்சி நடக்கிறது..!